Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 25 மார்ச் (ஹி.ச.)
சிறப்பு ஏற்பாடாக, அயோத்தியில் நடைபெறும் ராம நவமி விழா முழுவதும் தூர்தர்ஷன் நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அயோத்திக்கு வருகை தரும் பக்தர்கள் ஸ்ரீராமரின் தரிசனத்தைப் பெறும் வாய்ப்பையும், நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த புனித நிகழ்வில் இணைந்து அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
இதுகுறித்து,ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறிய போது,
ராம நவமி தினத்தில் நண்பகல் 12 மணியளவில் கருவறையில் ‘சூரிய திலகம்’ நிகழ்வு நடைபெற உள்ளது.
அப்போது சூரியக் கதிர் ஒன்று சுமார் நான்கு நிமிடங்கள் பகவான் ஸ்ரீராமரின் நெற்றியில் நேரடியாகப் பட்டு, தெய்வீகமும் வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த காட்சியை உருவாக்கும்.
இந்த அரிய வானியல் துல்லியத்துடன் கூடிய நிகழ்வைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழ்வின் துல்லியத்தை உறுதி செய்யும் நோக்கில், திருவிழாவுக்கு முன்பாக இரண்டு முதல் மூன்று முறை ஒத்திகை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள் இந்த விசேஷ தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பெருந்திரளான பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு, ஆலய வளாகத்திற்குள் நேரடியாக காண முடியாதவர்களுக்காக பல இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட உள்ளன.
பக்தர்களின் வசதிக்காக, அதிகாலை முதல் நள்ளிரவு வரை தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரசாத விநியோகத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடிநீர், நிழற்குடைகள், மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM