Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
இக்கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜக, தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும். எனவே, பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறnனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி!
தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்.
தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b