Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 25 மார்ச் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் சித்தம்பாக்கம் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான புல எண் 379/1 இல் உள்ள ஏரியிலிருந்து அரசு அனுமதித்த அளவிற்கு மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு சிறுவகை கனிம சலுகை விதி 12 (2-A) படி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோத் ராஜ் என்பவருக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை
இயக்குனர் ஆகியோரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியானது சித்தம்பாக்கம் ஏரியிலிருந்து 210 மீட்டர் நீளம் 159 மீட்டர்
அகலத்தில் சுமார் 3.5 அடி அளவிற்கு 30 ஆயிரத்து 51 கன மீட்டர் சாதாரண மண்ணை
வெட்டி எடுத்து குவாரி பணி செய்ய, இந்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 29ஆம்
தேதி வரை என 55 நாட்களுக்கு குத்தகை ஒப்பந்த பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு அனுமதித்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் மணல் கொள்ளை
நடைபெறுவதாகவும், அரசு அனுமதித்த அளவான 3.5அடி ஆழத்திற்கு பதிலாக 9 முதல் 10
அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்கப்படுவதாகவும் சித்தம்பாக்கம் கிராமத்தைச்
சேர்ந்த பொதுமக்கள் மண் எடுத்துச் செல்லும் லாரிகளை ஏரியிலேயே தடுத்து
நிறுத்தி லாரிகளை சிறை பிடித்து மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் இருவேறு சாலை பணிகளுக்காக பல்வேறு
ஏரிகளில் இருந்து மண் எடுத்து சாலை பணிகளுக்கு பயன்படுத்து வரும் நிலையில்
இதுபோல் கமர்சியல் குவாரிகளுக்கு மண்ணை எடுத்து விற்பனை செய்யவும் அரசு அனுமதித்து வருகிறது.
இந்த கமர்சியல் குவாரிகளை அரசு அனுமதிப்பதன் நோக்கம் அரசுக்கு வருவாய் ஈட்ட
வேண்டும் என்ற அளவில் இருந்தாலும் குவாரி நடத்தும் குவாரிதாரர்கள் மாவட்ட
நிர்வாகம் கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசு அனுமதித்த ரசீதுக்கு பதிலாக போலி
ரசீதுகளை தயாரித்து அதன் மூலம் லாரிகளில் மண்ணை கொள்ளை அடித்து விற்பனை
செய்வதால் அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பீடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அரசின் அனுமதியை தவறாக பயன்படுத்தி அனுமதித்த இடத்தை விட்டு
பல்வேறு இடங்களில் குட்டை குளங்களைப் போல் மண் எடுத்து விடுவதால் எங்கு பள்ளம் இருக்கிறது, எங்கு மேடு இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு மழைக்காலங்களில்
தண்ணீர் தேங்கி சமமாக நிற்பதால் ஏரியில் உள்ள பள்ளம் தெரியாமல் பொதுமக்கள் விழுந்து உயிரிழக்கும் அபாயத்துடன் உடன் நீர்வளம் பாதிக்கப்படுவதால் விவசாயமும் பாதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும் கனிமவளத்துறையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு
இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக மண் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam