2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் - திருவொற்றியூர் தொகுதி கள நிலவரம்!
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி , பாரம்பரிய அரசியல் வரலாற்றையும், பல்வேறு கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களையும் சந்திக்கும் ஒரு முக்கியத் தொகுதியாகும். திருவொற்றியூர் வடிவுடைய
T


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி , பாரம்பரிய அரசியல் வரலாற்றையும், பல்வேறு கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களையும் சந்திக்கும் ஒரு முக்கியத் தொகுதியாகும்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், சென்னை உரத் தொழிற்சாலை மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தொகுதியில் இருப்பது இதன் பொருளாதார முக்கியத்துவத்தை குறிக்கிறது.

திருவொற்றியூர் தொகுதி, கடந்த காலங்களில் தி.மு.க. அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் கோட்டையாக மாறி மாறி வந்துள்ளது.

1967 முதல் 2021 வரையிலான 13 தேர்தல்களில், தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

திருவொற்றியூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளும், தீர்க்கப்படாத பிரச்சினைகளுமே 2026 தேர்தலின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளால் திருவொற்றியூர் கடற்கரைச் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி விரைவுச் சாலைகளில் எந்நேரமும் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவுறாதது மக்களின் அதிருப்திக்குக் காரணமாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் விட, சுற்றுச்சூழல் மாசுதான் இப்பகுதி மக்களை வாட்டி எடுக்கும் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.

மணலி பகுதியில் செயல்படும் உரத் தொழிற்சாலைகள், எண்ணூர் அனல் மின் நிலையம் மற்றும் பல தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் நச்சுப் புகையால் காற்று மற்றும் நிலத்தடி நீர் பெருமளவில் மாசுபடுவது இப்பகுதி மக்களின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கனமழைக் காலங்களில், கடலோரப் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதும், மழைநீர் வடிகால் வசதிகள் முறையாகச் செயல்படாமல் இருப்பதும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போதைய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், ஆளும் கட்சியின் ஆதரவுடன் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான மேம்பாலப் பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைச் சீரமைப்பதில் கவனம் செலுத்தி வந்தாலும், மாசு போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் உள்ள தாமதம் ஆளும் கட்சிக்குச் சவாலாக இருக்கும்.

என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாகும்.

திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1967 அ. பொ. அரசு

(தி.மு.க)

1971 மா. வெ. நாராயணசாமி (தி.மு.க)

1977 பொ. சிகாமணி (அ.தி.மு.க)

1980 குமரி அனந்தன்

(காந்தி காமராசு)

1984 ஜி. கே. ஜெ. பாரதி (காங்கிரஸ்)

1989 து. கு. பழனிசாமி (தி.மு.க)

1991 கே. குப்பன் (அ.தி.மு.க)

1996 டி. சி. விஜயன் (தி.மு.க)

2001 த. ஆறுமுகம் (அ.தி.மு.க)

2006 கே. பி. பி. சாமி

(தி.மு.க)

2011 கே. குப்பன் (அ.தி.மு.க)

2016 கே. பி. பி. சாமி (தி.மு.க)

2021 கே. பி. சங்கர் (தி.மு.க)

Hindusthan Samachar / Durai.J