Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் 85 முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
எனவே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய அரசு அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
கோவிட் காலத்தைப் போல என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை என்ற கதையைத் (script) தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?. மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. ‘இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?’ என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி...”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b