Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மார்ச் (ஹி.ச.)
கடந்த நான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் 285 கைதிகள் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆர்சி) தானாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.
மாநில சிறைகளில் நிலவும் வாழ்க்கைத் தரம், சுகாதார வசதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது.
என்ஹெச்ஆர்சி வெளியிட்ட அறிக்கையின் படி, 2022ஆம் ஆண்டு அதிகபட்சமாக 90 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் 31 வரை மட்டும் 66 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மரணங்களுக்கு தற்கொலை மற்றும் நாள்பட்ட நோய்களே முக்கிய காரணங்கள் என சத்தீஸ்கர் அரசு முன்பே சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மார்ச் 23ஆம் தேதி வெளியான தகவலின் அடிப்படையில் என்ஹெச்ஆர்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதில், சத்தீஸ்கர் சிறைகள் அதிக நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது நோய்த்தொற்றுகள் பரவுவதற்கும் கைதிகளிடையே மன அழுத்தம் அதிகரிக்கவும் காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறைகளில் மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதும், அவசர மருத்துவ சேவைகள் வழங்குவதிலும் சுகாதார அவசரநிலைகளை கையாளுவதிலும் தடையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், அது கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள்—குறிப்பாக ‘வாழ்வுரிமை’ மற்றும் ‘சுகாதார உரிமை’—மீறப்பட்டதாகக் கருதப்படும் என என்ஹெச்ஆர்சி தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சிறைத்துறைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ள அறிக்கையில், சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை நெருக்கடி, காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்கள் மற்றும் இப்பிரச்சினைகளை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b