Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் விபிஎன் (VPN) பயன்படுத்தி வெளிநாட்டு முகவரியில் இருந்து அனுப்பப்படுவதால், குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், தங்களுக்கு கிடைத்த அழைப்பு குறித்து சென்னை விமான நிலைய காவல் துறையினருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த சோதனையின் முடிவில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால், இந்த மிரட்டலும் வழக்கமாக வரும் புரளி என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது (33) என்பவர் இந்த மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய தனிப்படை காவல் துறையினர், திருவிடைமருதூர்க்கு சென்று நிசார் அகமது கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ்களையும் அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / ANANDHAN