Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச)
சென்னையின் ஐஸ் ஹவுஸ்
பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவர் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
நேற்று இரவு அவர் குடிபோதையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரோந்து பணியில் இருந்த ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து சுரேந்திரனை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் காவலரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த சுரேந்திரன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், காவலர் கல்யாணசுந்தரத்தின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் சுரேந்திரனின் குடும்பத்தினர் அவரை நேரடியாக ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.
மேலும், காவலரிடம் பறிக்கப்பட்ட செல்போனையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவலரிடம் ஆபாசமாக பேசியது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது மற்றும் செல்போனை பறித்துச் சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ