விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், 26 மார்ச் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் முன்பு சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்
Head Master


தஞ்சாவூர், 26 மார்ச் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் முன்பு சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, விழா மேடையில் ஒலிபரப்பப்பட்ட விஜய் பட பாடலுக்கு நடனமாடினார்.

அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கும் ஒருவர் நடனமாடியது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதன்பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், தவெக மகளிர் தின விழாவில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்துகொண்டு மேடையில் நடனம் ஆடியது உண்மை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தான் வகிக்கும் பணியின் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக, நன்னடத்தை விதியை மீறி ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, அரசியல் கட்சி விழாவில் கலந்துகொண்டு நடனமாடியதற்காக, கிருஷ்ணவேனியை பணியிடை நீக்கம் செய்த பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் பங்கேற்று நடனமாடியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN