Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 26 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டசபை தொகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன.
தற்போது கன்னியாகுமரி அ.தி.மு.க வசமும், நாகர்கோவில் பா.ஜ.க வசமும், பத்மநாபபுரம் தி.மு.க வசமும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர தொகுதியாக விளங்குவது நாகர்கோவில் தொகுதி. இங்கு பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில், கோட்டாறு புனித சவேரியார் பேராலயம், வரலாற்று சிறப்பு மிக்க மணிமேடை, கோட்டாறு சந்தை ஆகியவை உள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் பள்ளிகள் அதிகம் உள்ளன.
மாவட்டத்தின் தலைநகரம் என்பதால் ஆட்சியர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்துமே நாகர்கோவிலில் தான் உள்ளன.
100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இத்தொகுதியில் இந்து நாடார் பெரும்பான்மை சமூகத்தினர். கிறிஸ்தவ நாடார்கள், வெள்ளாளர், ஆசாரிமார், இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையிலும், மற்ற சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு நாகர்கோவில் தொகுதியில் 1,25,873 ஆண் வாக்காளர்கள், 1,311,39 பெண் வாக்காளர்கள், 10 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2, 57, 022 வாக்காளர்கள் உள்ளனர்.
நாகர்கோவில் தொகுதியில், 1989, 1991, 1996 ஆகிய 3 தேர்தல்களிலும் எம்.மோசஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதில் 2 முறை காங்கிரஸ் சார்பிலும், 1 முறை தமாகா சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற நாஞ்சில் எம்.வின்சென்ட் எம்ஜிஆர் அமைச்சரவையில் நிதி- பொதுப்பணித் துறை துணை அமைச்சராக இருந்தார்.
இந்தத் தொகுதியை பொருத்தவரை தொடக்கத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்து மாநில கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுமே மாறி, மாறி வெற்றி பெற்று வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்று தமிழக அளவில் பேசப்பட்டார்.
பா.ஜ.க-வில் இந்தமுறையும் எம்.ஆர்.காந்தி சீட் கேட்கிறார். அதே சமயம் பொன்.ராதாகிருஷ்ணனும் சீட்டுக்காக காய்நகர்த்துகிறார். டெல்லியில் நிதின் கட்கரி மூலம் சீட்டுக்கு முயன்றுவருகிறார்.
தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் சிட்டிங் மேயர் மகேஷ் சமுதாய கோயில்களுக்கு சொந்த செலவில் கலையரங்கம் அமைத்துக்கொடுப்பது, தரைத்தளம் அமைப்பது என சொந்த பணத்தை வாரி இறைக்கத் தொடங்கிவிட்டார்.
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கிச்சன் கேபினெட் மூலமும், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் கனிமொழி மூலமும் சீட்டுக்காக காய்நகர்த்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதியதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு, மீனவர்கள் தரப்பில் வரவேற்பு காணப்படுகிறது. எனினும் மீனவ கிராமங்கள் தவிர்த்து இந்த ஆதரவு மற்ற சமூக மக்களிடம் பெரிய அளவில் இல்லை என கள நிலவரம் கூறுகின்றது.
நாகர்கோவில் தொகுதியில் இரண்டு கூட்டணி கட்சிகளும் அறிவிக்கும் வேட்பாளரைப் பொறுத்து கள நிலவரம் அமையும் என்பதே தற்போதைய நிலவரம்.
இந்த தொகுதியில் விவசாயம் மற்றும் வணிகம் பிரதான தொழில்களாகும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் அனந்தனார் கால்வாய் மூலம் வேளாண்மையை செழித்தோங்கச் செய்கிறது.
குப்பைக் கிடங்கால் பிரச்னை:
நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கடற்கரைச் சாலை சந்திப்பில் உள்ளவலம்புரிவிளையில் கொட்டப்பட்டு அங்கு நுண்ணுயிர் உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்படும்போது, புற நகரப்பகுதியாக இருந்த வலம்புரிவிளை பின்னர் நகரம் விரிவாக்கத்தினால் இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, என்ஜிஓ காலனி, மேலகிருஷ்ணன்புதூர் என வளர்ச்சியடைந்து குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
எனவே, இந்தக் குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் குப்பைக்கிடங்கை இடம்மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிப்பதும், வென்ற பின் கண்டுகொள்ளாததும் பெரும் குறையாக உள்ளது.
முற்றுப்பெறாத புதை சாக்கடை திட்டம்:
இதே போல நாகர்கோவில் மாநகரில் புதைச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
ஆனால், திட்டம் இன்னும் நிறைவு பெறாமல் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் நகரில் சாலை விபத்துகள் என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டுகோள்.
இந்தத் தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் எதிர்பார்ப்பில் ஒன்று. தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை.
தனி வட்டாட்சியரகம் தேவை:
மாவட்ட தலைநகராக உள்ள நாகர்கோவிலில் வட்டாட்சியர் அலுவலகம் தனியாக இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. தற்போது நாகர்கோவில் வட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியரின் கீழ்தான் இயங்கி வருகிறது. இந்த வட்டம் பெரிய பரப்பிலான, அதிக மக்களுக்கான வட்டமாக இருப்பதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, அகஸ்தீஸ்வரம் வட்டத்தை பிரித்து, நாகர்கோவிலுக்கு என தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
Hindusthan Samachar / vidya.b