பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல், 26 மார்ச் (ஹி.ச) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 26) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல், பாம்பு உள்பட ப
ஹி.ச


திண்டுக்கல், 26 மார்ச் (ஹி.ச)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 26) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சேவல், மயில், வேல், பாம்பு உள்பட படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்குக் காப்புக் கட்டப்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து, பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கும். அதன்படி, திரளான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே தீர்த்த காவடி எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஆறாம் நாளான மார்ச் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, நண்பகல் 12 மணிக்கு தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 4-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

முக்கிய பிரமுகர்கள் என்ற முன்னுரிமை இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

Hindusthan Samachar / vidya.b