Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் அமைப்பு சார்ந்த சிக்கல்களைப் பற்றி போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு இன்று கவலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள், பிராந்திய இணைப்புத் திட்டமான ‘உதான்’ திட்டத்தின் செயல்பாட்டுச் சவால்கள், மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) காணப்படும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து குழு விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தது, ஒரே ஆண்டில் சுமார் 100 பாதுகாப்பு குறைபாடுகள் பதிவாகியிருப்பது, மேலும் 19 பாதுகாப்பு விதிமீறல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது போன்றவை அமைப்பு ரீதியான கோளாறுகளை வெளிப்படுத்துகின்றன,எனக் குழு குறிப்பிட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, முழுமையான பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டு ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில்,சுதந்திரமானஉயர்மட்டக் குழுவை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 9,200 கோடிக்கும் மேற்பட்ட செலவில் 657 வழித்தடங்கள் உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வையபிலிட்டி கேப் ஃபண்டிங் (VGF) மானிய காலம் முடிவடையும் வழித்தடங்களுக்கு வெளியேறும் திட்டம் இல்லை என அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இதுவரை தொடங்கப்படாததும் கவலைக்குரியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணிக்கான செலவு, வழித்தடங்களின் செயல்திறன், சுயநிலைத்தன்மையை அடைந்த பாதைகள் ஆகியவற்றை மதிப்பிடும்சுதந்திரமானஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.
டிஜிசிஏ-வில் அனுமதிக்கப்பட்ட 1,630 பணியிடங்களில் 843 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.இது 48.3 சதவீத காலிப்பணியிட விகிதத்தை காட்டுகிறது. இந்த பற்றாக்குறையை சரிசெய்ய காலவரையறை கொண்ட ஆட்சேர்ப்பு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 35 கோடிக்கும் அதிகமான பயணிகள் விமான சேவையை பயன்படுத்தினாலும், பயணிகளின் உரிமைகளை உறுதி செய்யும் சட்டபூர்வ கட்டமைப்பு இல்லாதது குறிப்பிடப்பட்டுள்ளது.
இழப்பீடு, தாமத மேலாண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயணிகள் உரிமைச் சாசனம், ‘பாரதிய வாயுயான் அதினியம் 2024’ன் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலதன முதலீட்டுத் திட்டங்கள் மீது நாடாளுமன்றம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM