Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச)
தமிழ்கம் மற்றும் புதுச்சேரியில் அரசின் பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தைப் பின்பற்றக் கூடிய பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது.
இத்தேர்வினை எழுத மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 3 வார காலமாக நடைபெற்று வந்த பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் (மார்ச் 26ம் தேதி) முடிகின்றன.
இன்றைய தேர்வில் தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு மற்றும் நெறியியல், கணினி அறிவில், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின்பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன.
அதன் தொடர்ச்சியாக பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு நாளையுடன் (27ம் தேதி) முடிகிறது.
அதேபோல் கடந்த 11ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற கணக்கு தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 569 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர், தனித் தேர்வர்கள் 17 ஆயிரத்து 763 பேர். இந்நிலையில் நேற்றைய தேர்வில் பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 284 பேரும், தனித் தேர்வர்கள் 1524 பேரும் பங்கேற்கவில்லை.
நேற்று நடைபெற்ற கணக்கு பாட தேர்வில் திருப்பத்தூர் 1, கடலூர் 1 என இரண்டு பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பறக்கும் படையிடம் சிக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வில் அறிவியல், சமூக அறிவியல், மற்றும் விருப்ப மொழிப்பாட தேர்வுகள் என இன்றும் 3 தேர்வுகள் நடக்க இருக்கின்ற நிலையில், ஏப்ரல் 6ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
Hindusthan Samachar / vidya.b