Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
நாம் தினசரி பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் கீழ்ப்பகுதியில், ஊசி முனை அளவிலான ஒரு சிறிய துளை இருப்பதை பலர் கவனித்திருப்பார்கள்.
இத்துளையை சிலர் மைக்ரோபோன் அல்லது ‘ரீசெட்’ பொத்தானாக தவறாக நினைப்பதும் உண்டு. ஆனால், இதன் உண்மையான பயன்பாடு ‘நாய்ஸ்-கான்சலிங் மைக்ரோபோன்’ (Noise-canceling microphone) ஆகும்.
பொதுவாக, தொலைபேசியில் பேசும்போது முதன்மை மைக்ரோபோன் பயனரின் குரலைப் பதிவு செய்கிறது. இதே சமயம், இந்தச் சிறிய துளைக்குள் உள்ள இரண்டாவது மைக்ரோபோன் சுற்றுப்புற இரைச்சல்களை — வாகன சத்தம், காற்றின் ஒலி, மக்கள் கூட்டத்தின் சலசலப்பு போன்றவற்றை தனியாகப் பதிவு செய்கிறது.
பின்னர், ஸ்மார்ட்போனில் உள்ள தொழில்நுட்பம் இந்த இரு ஒலிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, பின்னணி இரைச்சலை வடிகட்டி, பயனரின் குரலை மட்டும் தெளிவாக எதிர்பார்ப்பவருக்கு சென்றடையச் செய்கிறது.
இதன் மூலம், சத்தமுள்ள அல்லது நெரிசலான சூழல்களிலும் கூட, உங்கள் குரல் தெளிவாகக் கேட்கும் வகையில் அழைப்புகள் மேற்கொள்ள முடிகிறது.
மேலும், நவீன உயர்தர ஸ்மார்ட்போன்களில் இத்தகைய சிறிய துளைகள் இரண்டு அல்லது மூன்று வரை காணப்படலாம். ஒன்று குரலைப் பதிவு செய்ய, ஒன்று சுற்றுப்புற இரைச்சலை அளவிட, மற்றொன்று வீடியோ பதிவு செய்யும் போது திசை சார்ந்த ஒலியைத் துல்லியமாகப் பதிவு செய்ய பயன்படுகிறது.
இதற்கிடையில், பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பு உறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், சில குறைந்த தரமான உறைகள் இந்தச் சிறிய துளைகளை மறைத்துவிடும் அபாயம் உள்ளது. அப்படி ஏற்பட்டால், பேசும் போது குரல் மந்தமாக அல்லது கிணற்றுக்குள் இருந்து வரும் போல் கேட்கும்.
மேலும், இந்தத் துளை சிம் கார்டை வெளியே எடுக்கும் துளையைப் போன்றே தோன்றுவதால், சிலர் தவறுதலாக அதில் ஊசியை நுழைப்பதும் உண்டு. இது மைக்ரோபோனின் உள்ளமைப்பில் உள்ள நுண்ணிய சவ்வை சேதப்படுத்தி, நாய்ஸ்-கான்சலிங் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
எனவே, இந்தச் சிறிய துளையின் பயன்பாட்டை அறிந்து, அதனை பாதுகாப்புடன் பயன்படுத்துவது முக்கியம்.
Hindusthan Samachar / JANAKI RAM