வீரப்பன் திருடன் என்றால் ஜெயலலிதா, கருணாநிதிக்கு என்ன பெயர்? - சீமான் கேள்வி
மேட்டூர், 26 மார்ச் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேட்டூர் வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரச்ச
TN-Assembly-ellection


மேட்டூர், 26 மார்ச் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேட்டூர் வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அவரது பிரச்சார வாகனம் மற்றும் ஒளிப்பதிவு மேற்கொள்ள வந்த வாகனம் சாலை நடுவே நிறுத்தியதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த மேச்சேரி காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீஸார் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சீமான் வந்ததால் வாக்குவாதத்தை கைவிட்டு, அவரது பேச்சை கவனிக்க தொடங்கினர்.

அப்போது அவர் பேசியதாவது:

ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார். நமது முதல்வர் கர்நாடகா காங்கிரஸ் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார்.

கட்சித் தலைவராக போய்க் கேட்பது தவறில்லை, ஆனால், முதல்வர் என்ற பெயரில் போய்க் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து கூடவே வைத்திருக்கிறர்கள்.

கச்சத்தீவு, காவிரி நீர் உரிமை, முல்லை பெரியாறு உரிமை என அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றார். இதனால் 500 டிஎம்சி பெற வேண்டிய நாம் 150 டி.எம்சி.க்காக கையேந்தி நிற்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் தேவையில் தன்னிறைவு திட்டம் கொண்டுவந்து கடலில் கலக்கிறதை தடுத்து நிறுத்தி ஏரிகள், குளங்களை நிரம்பி அடுத்தவரிடத்தில் கையேந்தி நிற்கிற நிலைமையை மாற்றுவோம்.

ஒரு விழுக்காடு, அரை விழுக்காடு வைத்திருக்கிறவர்கள் கூட்டணிக்காக பேரம் பேசி செல்கிற நேரத்தில் தனித்தன்மையாக மக்களை சந்தித்து 8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம். திமுக அதிமுக தனியாக இதுதான் எங்கள் வாக்குகள் என்று சொல்ல முடியாது.

எவ்வளவோ பதவி ஆசை காட்டியபோதும், நாங்கள் பதவி, பணத்திற்காக வந்தவர்கள் அல்ல மக்களின் உதவிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் வந்தவர்கள். மாற்றம் என்பது சொல் அல்ல அது செயல்.

நாங்கள் வந்தால் மிக்சி, கிரைண்டர் அண்டா, பிரிட்ஜ், டிவி, ரூ 5,000, ரூ 10,000, தருவோம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம். நீங்கள் அதனை வாங்கிக் கொள்கிற வேலைவாய்ப்பும், வருவாய் பெருக்கத்தையும் ஏற்படுத்தி கொடுப்போம். ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கை மூடுவேன். பனை பால், தென்னை பால், ஈச்சம்பால், மூலிகைச்சாறு என்று கல்லை திறந்து விடுவேன்.

அதிமுக, திமுக வெல்வது சாதாரண நிகழ்வு தான். அவர்கள் பலமுறை வென்று இருக்கிறார்கள் ஆனால், நாங்கள் வெல்வது சரித்திரத்தில் பதிவிடும் மாபெரும் புரட்சி. வீரப்பன் திருடன் என்றால் ஜெயலலிதா, கருணாநிதிக்கு என்ன பெயர்? விற்றவனை தேடிப் பிடிக்க அலைந்தார்கள்.

ஆனால், வாங்கியவனை ஏன் தேடவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b