Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 26 மார்ச் (ஹி.ச.)
பங்குனி உத்திர திருவிழாவானது வருகின்ற 1-ம் தேதி தென் மாவட்டங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு வருகின்ற 1-ம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதற்காக கோவில்களுக்கு செல்வார்கள் என்பதால் இந்த உள்ளூர் விடுமுறையான விடப்பட்டுள்ள நிலையில், பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தற்போது ஆடுகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, குலதெய்வ வழிபாட்டின் போது ஆடுகளை குலதெய்வத்திற்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்துவதை பக்தர்கள் பாரம்பரியமாக கொண்டுள்ள நிலையில், பங்குனி உத்திர திருவிழாவிற்காக ஏராளமான பொதுமக்கள் தற்போது ஆடுகளை வாங்க குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல ஆட்டுச் சந்தையான பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தற்போது ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வரும் நிலையில், தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களைப் போன்று தற்போது ஆடுகள் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், ஒருவருக்கு ஒரு ஆடுகள் முதல் 3 ஆடுகள் வரை மட்டுமே வாங்கி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN