Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 மார்ச் (ஹி.ச.)
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, தீவிரப் பிரச்சாரக் கட்டத்தை எட்டியுள்ளது.
வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ளது.
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு :
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)
ஆல் இந்தியா என்.ஆர். காங்கிரஸ் (ATNRC) -16
பாரதிய ஜனதா கட்சி (BJP) -10
அ.தி.மு.க (AIADMK)-2
லட்சிய ஜனநாயக கட்சி (L.J.K)- 2
இந்தியா கூட்டணி (INDIA):
தி.மு.க (DMK) மற்றும் காங்கிரஸ் (INC) கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.
தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறி காரணமாக, காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன.
தொடக்கத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாகக் காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளையும் தாண்டி, கூடுதலாக 6 தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க 13 தொகுதிகளில் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் 22 தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
குறிப்பாக மங்கலம், திருபுவனை, ராஜ்பவன், சாணாப்பட்டு, தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் நெல்லித் தோப்பு தொகுதியை மட்டும் வாபஸ் பெற காங்கிரஸ் சம்மதித்துள்ளது.
மற்ற 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவைத் திரும்பப் பெறப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழப்பத்தால் அதிருப்தியடைந்துள்ள பிற கூட்டணிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட்எங்களுக்கான தொகுதிகள் முறையாக ஒதுக்கப்படாவிட்டால், தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என மாநிலக் குழு அறிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஏற்கனவே 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தி வேட்பாளர்களைச் சமாதானம் செய்ய முயன்று வருகிறது.
அவர்கள் மனுவைத் திரும்பப் பெறாத பட்சத்தில், பல தொகுதிகளில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளே ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
இது புதுச்சேரி தேர்தல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(தவெக)நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையை ஏற்றுக்கொண்டு நேயம் மக்கள் கழகம் என்ற கட்சி த.வெ.க-வுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி போட்டியிடுகின்றன.
மீதமுள்ள 28 தொகுதியில் புதிதாக த.வெ.க-வில் இணைந்துள்ள
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க, அ.தி.மு.க-விலிருந்து விலகிய முக்கியப் பிரமுகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மக்களின் முக்கியக் எதிர்பார்ப்புகள் :
புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
ஆளும் ஏ.ஐ.என்.ஆர்.சி கட்சி இக்கோரிக்கையை தொகுதிப் பங்கீட்டின் போது வலியுறுத்தத் தவறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தி.மு.க தனது திராவிட மாடல் ஆட்சியைப் புதுச்சேரியிலும் கொண்டுவர முனைப்பு காட்டுகிறது.
மறுபுறம், பா.ஜ.க தனது ஆளுமையை நிலைநாட்டத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மாற்று அரசியல்:
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, பாரம்பரியக் கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி வாக்காளர் புள்ளிவிவரம்:
மொத்தம் 9,44,211 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பெண் வாக்காளர்கள்: 5,00,477 (ஆண்களை விட அதிகம்)
ஆண் வாக்காளர்கள்: 4,43,595
மூன்றாம் பாலினத்தவர்: 139
தற்போது 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இம்முறை புதுச்சேரியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
Hindusthan Samachar / Durai.J