புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் - திருமாவளவன் அறிவிப்பு
சென்னை, 26 மார்ச் (ஹி.ச) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில்,
VCK Candidates Contesting in Puducherry


சென்னை, 26 மார்ச் (ஹி.ச)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க - அ.தி.மு.க. அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் - தி.மு.க. அடங்கிய கூட்டணியும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர, புதிதாக களமிறங்கியிருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க.வும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது.

அதன்படி காங்கிரஸ் 16, திமுக 12, விசிக 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 என 30 தொகுதிகளில் போட்டியிடக் கூட்டணிக்குள் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆனால் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது என அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

மேலும் வி.சி.க. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொல். திருமாவளவன் இன்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து 'உழவர்கரை தொகுதியை' திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அந்தத் தொகுதி வி.சி.க.வுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுக்கிறது.

இதனால் காங்கிரஸ் கூட்டணியில் வி.சி.க.வுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று (26.03.2026) பிற்பகல் 03.00 மணியோடு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது.

எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்துவரும் பாஜக கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக வேட்பாளர்களுக்குப் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஊசுடு தொகுதியில் பெ. அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன் போட்டியிடுகிறார்.

நெட்டப்பாக்கம் தொகுதியில்

ப. அமுதவன் போட்டியிடுகிறார்.

உழவர்கரை தொகுதியில் செல்வ. புஷ்பலதா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b