Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச)
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை மாநிலத் தலைமை தேர்வு செய்து, தேசியத் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பும். டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் குழு முறையான பரிசீலனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடும்.
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு,
அவர் கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம் என்றார்
கூட்டணி என்று வரும்போது கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளிலேயே இந்த முறையும் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை. வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிகள் மாறுவது அரசியல் களத்தில் இயல்பான ஒன்றுதான். பாமக, தமாகா என அனைத்துக் கட்சிகளுடனும் பேசி, எங்கள் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொகுதிகளைப் பிரித்து வழங்கியுள்ளோம்.
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைப் பொறுத்தவரை, அவர்கள் தமிழகத்தில் மட்டும்தான் ஒன்றாக இணைந்து செயல்படுவது போல வேஷம் போடுகிறார்கள். அண்டை மாநிலமான கேரளாவிலோ அல்லது புதுச்சேரியிலோ காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாகத்தான் களமிறங்குகின்றன. பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான வெறுப்பு மட்டுமே இவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்கள் சொந்த பணத்தையும், நேரத்தையும் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், இன்று தனது சொந்த நலனுக்காக, தனக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்ற ஒற்றை காரணத்திற்காக, தன்னை நம்பி வந்த அத்தனை தொண்டர்களையும் அம்போவென கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளார். கோவை தெற்கு தொகுதி மக்கள் கடந்த தேர்தலிலேயே அவருக்கு சரியான பதிலை அளித்துவிட்டனர்
கட்சிக்கே விசுவாசமாக இல்லாத, கட்சித் தொண்டர்களையே காப்பாற்ற முடியாத ஒருவர், எப்படி மக்களுக்குச் சேவை செய்வார் என்பதற்கு கமல்ஹாசன் ஒரு சிறந்த சாட்சி. புதிதாக கட்சி ஆரம்பிக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடம். மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்
அப்போது செய்தியாளர்கள், கமல்ஹாசன் மீதான இந்த விமர்சனம், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கும் பொருந்துமா? என எழுப்பிய கேள்விக்கு,
எது யாருக்குப் பொருந்துமோ, அதை நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள் என சூசகமாகப் பதிலளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ