Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை 26 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அதனை மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (26.03.2026) கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் படிவம் 6ஐ சமர்ப்பித்தோ, இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சிறப்புத் தீவிரத் திருத்தம் முடிவடைந்த பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க இயலும்.
எனவே தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை பெயர் விடுபட்டிருந்தால், அதனைச் சேர்க்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.
எனவே தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பெயர் பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது ECINet செயலியைப் பயன்படுத்தலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b