Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, புதிய தமிழகம் கட்சி மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர்யிலும் நடைபெற்றன.
இந்த கூட்டங்களில், கடந்த 30 ஆண்டுகளாக தென் தமிழகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு கூட்டணியில் உரிய அரசியல் முக்கியத்துவமும், கட்சியின் வலிமைக்கு ஏற்ப தொகுதிகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பெரும் ஆதரவுடன் இயங்கும் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு நேர்காணலில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் 29ஆம் தேதி நடைபெறும் இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ