Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
தமிழகப் பெண்களை விலைமாதர்கள் என
இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது
ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நடிகர் விஜய் தலைமையிலான கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு, அந்தக் கட்சியில் உள்ள பெண்களை விலைமாதர்கள் என்ற பொருள்படும் அருவருக்கத்தக்க சொல்லைக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறார் பொன்ராஜ் என்பவர். அரசியல் விமர்சகர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் பேசி வரும் பொன்ராஜ் தமிழ்நாட்டு பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும் கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து அண்மையில் சர்ச்சைகள் எழுந்த போது, அவருக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய்க்கான அவரது கட்சியினரின் கண்மூடித்தனமான ஆதரவைத் தான் அது காட்டுகிறதே தவிர, அதற்கு மேல் அதில் ஆராய்ச்சிகள் செய்வதற்கு எதுவுமில்லை; அது தேவையுமில்லை; தமிழ்நாட்டின் இன்றைய சூழலுக்கு அது அவசியமுமில்லை. ஆனால், அப்துல்கலாமின் ஆலோசகர் என்றும், அரசியல் விமர்சகர் என்றும் பிழைப்பு நடத்தி வரும் பொன்ராஜ், விஜயின் கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் விலைமாதர்கள் என்று கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் நாகரிகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களால் இதை ஏற்கவே முடியாது.
தமிழ்ச் சமூகம் பெண்களை கடவுளாக வணங்கும் வழக்கம் கொண்டதாகும். பெண்களை இழிவுபடுத்தும் எவரையும் தமிழ்ச் சமூகம் மன்னித்ததே இல்லை. அறத்தின்படி பார்த்தாலும், சட்டத்தின்படி பார்த்தாலும் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும். ஆனால், இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கும் பதிவு செய்யாமல், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் குறித்து எதிர்க்கட்சியினர் எதையாவது பேசினால் உடனடியாக சம்மன் அனுப்பி விசாரிக்கத் துடிக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்டனம் கூட தெரிவிக்காமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பெண்களை இழிவுபடுத்திய கயவரை காவல்துறை கைது செய்யாமலும், மகளிர் ஆணையம் விசாரணை நடத்தாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களைத் தேடி ஆராய்ச்சிகள் நடத்தத் தேவையில்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் திமுகவின் கூலிப்படையாக அவர் முழங்கிக் கொண்டிருப்பது தான். பெண்களை இழிவுபடுத்தும் அனைத்துக் கயவர்களின் புகலிடமாக திமுக மாறி வருகிறது. பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்; கடைசியில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுத்து விட்டால் அவர்கள் அனைத்தையும் மறந்து திமுகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற அக்கட்சித் தலைமையின் திமிருக்கும், அகந்தைக்கும் வரும் தேர்தல் முடிவு கட்டுவது உறுதி.
திமுக ஆட்சியில் ஒருபுறம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 129 விழுக்காடும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இன்னொருபுறம் திமுகவின் அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பொன்முடி அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பேருந்து என்று இழிவுபடுத்தியதுடன், சைவம், வைணவம், பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்ட நிலையில் நீதிமன்றமே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த ஏழைப்பெண்மணியை அதே மனுவால் அடித்து விரட்டி அவமதித்தார்.
திமுகவால் கூலி கொடுத்து வளர்க்கப்படும் அக்கட்சியின் பேச்சாளர்கள் பெண்களைப் பற்றி பேசும் பேச்சுகள் காது கொடுத்துக் கேட்க முடியாதவை. அத்தகைய பேச்சுக்காக ஒரு பேச்சாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் புதிய துதிபாடியாக உருவெடுத்திருக்கும் நகைச்சுவை நாடக நடிகர் ஒருவர், கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ‘‘அந்தப் பெண் ஏன் புதருக்குள் போக வேண்டும். ஒவ்வொரு புதருக்கும் காவல்துறை லைட் போட முடியுமா?’’ வினா எழுப்பியுள்ளார். ஏற்கனவே 2018&ஆம் ஆண்டில் ஊடகத்தின் பணிபுரியும் பெண்கள் எவ்வாறு பதவி உயர்வு பெறுகிறார்கள்? என்பது குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக சமூகத்தால் காறி உமிழப்பட்டவர். அப்போது அவரைக் கண்டித்த திமுக தலைமை, இப்போது அவரை கொண்டாடி வருகிறது.
பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் டி.என்.ஏவில் கலந்தது. சட்டப்பேரவையில் திராவிட நாடு குறித்த விவாதத்தில் கலைஞர் குதர்க்கமாக பதில் அளித்த நாளில் இருந்தே இந்த வழக்கம் தொடங்கி விட்டது. இப்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பொன்ராஜ் உள்ளிட்ட கயவர்கள் அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
அவர்களுக்கு புகலிடம் அளித்து வருவதற்காக தமிழ்நாட்டு பெண்களிடம் திமுக தலைமை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ