அண்ணா பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகார் - துணை ஆணையர் தலைமையில் விசாரணை
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4-ஆம் ஆண்டு மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனக்கு வகுப்பு எடுக்கும் பேராசியர் ஒருவர், தொடர்ச்சியாக தனக்கு பால
Anna University


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4-ஆம் ஆண்டு மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனக்கு வகுப்பு எடுக்கும் பேராசியர் ஒருவர், தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மட்டுமல்லாமல், தனது தோழிகள் சிலருக்கும் அவர் பாலியல் ரீதியான குறுஞ்செய்தியை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக செல்போனில் அழைத்து தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக,

அண்ணா பல்கலைக்கழக கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, அபிராமிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது இன்று (மார்ச் 27) துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, மாணவியின் செல்போனை வாங்கி, பேராசியர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் அனைத்தையும் ஆய்வுசெய்து வருகின்றனர்.

புகாரில் மாணவி குறிப்பிட்டுள்ளது போல், பாலியல் ரீதியான செய்திகளை பேராசிரியர் அனுப்பியது நிரூபணமாகும் பட்சத்தில், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை, கல்லூரியின் அருகே ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN