விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைக்கூட்டம் - டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறை கண்காணிப்பு
வேலூர், 27 மார்ச் (ஹி.ச.) காட்பாடியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் பயிர்களை நாசம் செய்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் டிரோன்கள் மூலம் வனத்துறை அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் காட்
Herd of Elephants Damages Agricultural Lands


வேலூர், 27 மார்ச் (ஹி.ச.)

காட்பாடியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் பயிர்களை நாசம் செய்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் டிரோன்கள் மூலம் வனத்துறை அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் காட்பாடி வனச் சரகத்திற்குள் கடந்த சில மாதங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 13 யானைகள் கூட்டம் பனமடங்கி, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளின் வழியாக காட்பாடி வனச்சரகத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தின.

அதைதொடர்ந்து காட்பாடி வண்டறந்தாங்கல், கல்புதூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அடிக்கடி வந்து செல்கின்றன. பலமுறை காட்பாடி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் யானைகள் கூட்டம் அடிக்கடி சுற்றித்திரிகிறது.

நேற்று மாலை காட்பாடி கரசமங்கலம், சல்லாவூர் காட்டுப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் உலா வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, டிரோன் கேமராக்கள் மூலம் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் அறிந்து வருகின்றனர். மேலும், காட்பாடி வனச்சரகர் கந்தசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இன்று காலை முதல் யானைகளை ஆந்திரா வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஆந்திரா மாநிலத்திலிருந்து வலசை வரும் யானைகள் தமிழக எல்லைக்குள் தடம் மாறி வந்துவிடுகின்றன. அவை இங்குள்ள காட்டுப்பகுதிகளில் மட்டுமல்லாமல், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.

தற்போது 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் காட்பாடி வனச்சரகத்துக்குள் புகுந்துள்ளது.

அவற்றை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். மேலும் ஆந்திரா வனப் பகுதிக்குள் அவைகளை விரட்டும் பணியிலும் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b