அடிமைத்தனத்தை தூண்டும் வீடியோக்கள் - இன்ஸ்டாகிராம், யூடியூப்புக்கு ரூ.55 கோடி இழப்பீடு உத்தரவு
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) அமெரிக்காவில் சமூக ஊடகங்கள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்
அடிமைத்தனத்தை தூண்டும் வீடியோக்கள் - இன்ஸ்டாகிராம், யூடியூப்புக்கு ரூ.55 கோடி இழப்பீடு உத்தரவு


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

அமெரிக்காவில் சமூக ஊடகங்கள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பயன்பாட்டை அதிக நேரம் மேற்கொண்டதால் தனது மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.

மேலும், பயனர்கள் நீண்ட நேரம் தளங்களில் ஈடுபட்டு இருக்கும்படி சில அம்சங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனநல பாதிப்புக்கான பொறுப்பை மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்கள் மட்டுமன்றி, பயனர்களை தொடர்ந்து பயன்படுத்த தூண்டும் வடிவமைப்பு அம்சங்களும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

குறிப்பாக, முடிவில்லா ஸ்க்ரோலிங் (infinite scrolling) வசதி மற்றும் ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்ததாக வீடியோக்களை தானாக முன்வைக்கும் அம்சங்கள், பயனர்களை நீண்ட நேரம் தளங்களில் ஈடுபடச் செய்கின்றன என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இழப்பீடாக சுமார் ரூ.55 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதில் 70 சதவீதத்தை மெட்டா நிறுவனமும், மீதமுள்ள 30 சதவீதத்தை கூகுள் நிறுவனமும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இருப்பினும், சமூக ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பும் முக்கியமான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM