Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 மார்ச் (ஹி.ச.)
கர்ப்பிணிகளின் பனிக்குட நீரை ஆய்வுக்கு உட்படுத்தி, கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் மரபணு வியாதிகளை கண்டறியும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டது என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில்,
கர்ப்பமான 16 முதல் 20 வாரத்திற்குள், பனிக்குட நீரை (கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நீர்) ஆய்வுக்கு உட்படுத்தி, குழந்தைகளுக்கு மரபணு வியாதிகள் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதற்காக நாங்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டோம்.
ஏற்கனவே 'தசைநார் சிதைவு' எனும் மரபணு வியாதியால் குழந்தையை இழந்து, மீண்டும் கர்ப்பம் தரித்த அனிதா என்ற பெண்ணிற்கு பனிக்குடநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கருவுற்ற 18 வாரத்திலேயே, பனிக்குடநீர் ஆய்வு மாதிரி மூலம், கருவில் உள்ள சிசுவுக்கு இப்பிரச்சினை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது குழந்தையும் நல்ல நிலையில் பிறந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் தேசிய சுகாதாரக் குழுமத்தின் முயற்சியின் ஒரு அங்கமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது மரபணு ரத்தம் சார்ந்த வியாதிகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, பனிக்குடநீர் ஆய்வு செய்யப்படுகிறது.
இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ரத்தம் ஏற்றும் அவசியம், நோயுடனேயே வாழ வேண்டிய சூழல், குடும்பச்சுமை, வியாதியுடைய குழந்தைக்கான அரசின் மீதான பொருளாதார சுமை ஆகியவற்றை தவிர்க்க சிறந்த வாய்ப்பாகும்.
மேலும், ஓரிரு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அரிதாக செய்யப்படும். என்றார்.
சோதனைகள், மதுரை அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதன் மூலம், சுற்று வட்டார மக்கள் பலன் பெறுவர் என மருத்துவக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN