133 நாட்களுக்குப் பிறகு பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி
தென்காசி, 27 மார்ச் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ள நிலையில், சீசன் காலகட்டங்களில் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலை மோதுவத
Old courtallam falls


தென்காசி, 27 மார்ச் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ள நிலையில், சீசன் காலகட்டங்களில் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலை மோதுவது வழக்கம்.

அந்த வகையில், குற்றாலம் மெயின் அருவிக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய அருவியான பழைய குற்றால அருவியானது யாருக்கு சொந்தம்? என்கின்ற பிரச்சினையானது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இடையே ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் அடிப்படையில் எல்லைகள் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு, பழைய குற்றால அருவியானது வனத்துறை கைவசம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தற்போது வனத்துறையினர் அதனை பராமரிப்பு செய்துவரும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக பழைய குற்றால அருவியானது சீர் குலைந்தது.

அதனைத்தொடர்ந்து, அதனை சரி செய்ய வனத்துறையினர் அவ்வப்போது முயற்சி எடுத்து வந்த நிலையில், அவ்வப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேலும், மேலும் பழைய குற்றால அருவியானது பலத்த சேதமடைந்தன.

குறிப்பாக, பழைய குற்றால அருவியில் இருந்த தடுப்புகள், கழிவறைகள், தரைதளங்கள் மற்றும் பழைய குற்றால அருவி செல்லும் சாலைகள் முழுமையாக சீர்குலைந்த நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் வனத்துறையினர், சுற்றுலாத்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டதன் பயனாக தற்போது பழைய குற்றால அருவியானது புதுப்பொலிவு பெற்றுள்ளது.

குறிப்பாக, பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது, தடுப்புகள் அடித்து செல்லாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு பழைய குற்றால அருவியில் ஆண்களும், பெண்களும் ஒரே அருவியில் குளித்து வந்த நிலையில், தற்போது பழைய குற்றால அருவியின் நடுப்பகுதியில் சுவர் போன்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த பழைய குற்றால அருவியானது தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் கழிவறை செப்டிக் டேங்க் வேலை மட்டுமே மீதமுள்ள நிலையில், மற்ற பணிகள் அனைத்தும் முடிவுற்றதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டு வருவதால், மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலா பணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுமார் 133 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள பழைய குற்றால அருவியானது தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN