Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 27 மார்ச் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பறக்கும் படைகள் 18 குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 18 குழுக்கள் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (26.03.2026) காலை 6:00 மணி முதல் இன்று (27.03.2026) காலை 6:00 மணி வரை நடைபெற்ற சோதனையில், பத்மனாபபுரம் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,90,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகை ரூ.30,48,410/- ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, பத்மனாபபுரம் (232) தொகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,90,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகுதியைப் பொறுத்தவரை இதற்கு முன்னதாக ரூ. 69,000/- கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது வரை மொத்தம் ரூ. 2,59,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளின் நிலவரப்படி, குளச்சல் (231) தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 8,69,150/- கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிள்ளியூர் (234) தொகுதியில் ரூ. 6,90,790/- மற்றும் விளவங்கோடு (233) தொகுதியில் ரூ. 5,49,370/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தொகுதியான நாகர்கோவிலில் (230) இதுவரை ரூ. 4,30,400/- தொகையும், கன்னியாகுமரி (229) தொகுதியில் ரூ. 2,49,700/- தொகையும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதற்காகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் தீவிரமான நடவடிக்கைகள் மூலம், மார்ச் 27-ம் தேதி காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ. 30,48,410/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்லும்போது அதற்குரிய முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b