Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் டி.வி.கே நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுஜித் குமார் (11). அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் பிரதோஷ் (11). இவர்கள் இருவரும் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள கதிர் மில் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தனர்.
இப்பள்ளியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வந்ததால், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தான் பள்ளி தொடங்க இருந்தது.
இதன் காரணமாக, நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற மாணவர்கள் இருவரும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இந்த நிலையில், கண்ணம்பாளையம் குளத்தில் இரு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது, அது காணாமல் போன சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / Durai.J