தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து போட்டியிடக் கூடிய தொகுதிகள்
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து போட்டியிடக் கூடிய தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் என 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனிடையே, திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் நேற்று (26.03.2026) ஒரே நாளில் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது.

அதன்படி முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி, எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (27.03.2026) மாலை 6 மணி அளவில் அறிவிக்க உள்ளார்.

அதன்படி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் அதன் சின்னத்தில் 59 வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b