Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தும் த.வெ.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார்.
இதனையடுத்து அதிகாரப்பூர்வமான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மற்றொருபுறம் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இருப்பினும் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று (27.03.2026) நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள த.வெ.க. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சில தொகுதிகளில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 29ஆம் தேதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என அக்கட்சியின் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சென்னைக்கு வந்திருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b