2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - திருவாரூர் தொகுதி கள நிலவரம்
திருவாரூர், 27 மார்ச் (ஹி.ச.) நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியானது, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லையைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. தனித்தொகுத
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - திருவாரூர் தொகுதி கள நிலவரம்


திருவாரூர், 27 மார்ச் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியானது, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லையைத் தொடும் வகையில் அமைந்துள்ளது.

தனித்தொகுதியாக இருந்த திருவாரூர், 2011-இல் நடைபெற்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியது.

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்த கீழ்வேளூர், தனி சட்டப்பேரவை தொகுதியாக மாறியது. திருவாரூர் தொகுதியில், கூத்தாநல்லூர் நகராட்சி, கோட்டூர், மன்னார்குடி ஒன்றியங்களிலிருந்து சில ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

திருவாரூர் நகராட்சியின் 30 வார்டுகள், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 35 ஊராட்சிகள், கொரடாச்சேரி பேரூராட்சி பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட 44 ஊராட்சி, மன்னார்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 21 ஊராட்சி, கூத்தாநல்லூர் நகராட்சி பகுதி, கோட்டூர் ஒன்றியத்துக்குள்பட்ட 5 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் அவதரித்த ஊர், நீதிக்காக தனது மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச்சோழன் ஆட்சி புரிந்த பெருமைக்குரியது என திருவாரூர் தொகுதி பல்வேறு சிறப்புகளை கொண்டது.

சமூகம், தொழில் அமைப்பு:

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். நெல் பயிர் பிரதானமாகவும், பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்டவை அடுத்த நிலையிலும் பயிரிடப்படுகின்றன. இங்கு வெள்ளாளர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர்.

இதையடுத்து முக்குலத்தோர், ஆதிதிராவிடர், செட்டியார், முதலியார், நாடார் உள்ளிட்ட பல சமூகத்தினர் வசிக்கின்றனர். எனினும் சமூகம் ரீதியான வாக்குகள் இங்கு வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில்லை. 2011 கணக்கெடுப்பின்படி, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், 72.63 சதவீதம் கிராமப்புறத்திலும், 27.37 சதவீதம் நகர்ப்புறத்திலும் மக்கள் வசிக்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்குப் பின் மொத்த வாக்காளர்கள் 2,58,629 ஆவர். இதில் ஆண்கள் 1,26,355 பெண்கள் 1,32,254 இதரர் 20. இத்தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் --327 மொத்த வாக்குச்சாவடி மையங்கள் --- 170 ஆகும்

திருவாரூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அஸ்வினி பூபதிபாலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக கோட்டை என கருதப்படும் திருவாரூரில் திமுக சார்பில் மீண்டும் கலைவாணனே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு வரை, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடப்போவதாகவோ அல்லது ஸ்டாலின், உதயநிதி இவர்களில் ஒருவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2 முறை திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். எனினும், 2 முறையும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற நம்பிக்கை காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட வாய்ப்பிருக்காது என கூறப்படுகிறது.

திருவாரூரைப் பொறுத்தவரை, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுகவின் வாக்குகளை குறைக்க உதவுவார்களே தவிர, திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதால், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

நிறைவேறியவை:

கூத்தாநல்லூரில் புதிய அரசு கல்லூரி, ராஜாங்கட்டளையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தியது, புதிதாக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது, கொரடாச்சேரி கால்நடை மருத்துவமனையில் புதிய கட்டடம் என குறிப்பிடத்தக்க வகையில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளன.

மக்களின் எதிர்பார்ப்பு:

திருவாரூர் நகரப் பகுதியில் கடும் நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து எளிதாகும் வகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும், வாய்க்கால்களை தூர்வார வேண்டும், திருவாரூரில் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் அரைவட்டச்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்.

திருவாரூரில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும், திறந்தவெளிகளில் சேமிக்கப்படும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாத வகையில், நவீன வகையில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும், திருவாரூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b