சி.வி. சண்முகம் தொடர்பான ரகசியங்களை வெளியிடட்டுமா? - அதிமுக முன்னாள் நிர்வாகி மிரட்டல்
விழுப்புரம், 28 மார்ச் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் மீது, விழுப்புரம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பசுபதி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார
Pasupathi


விழுப்புரம், 28 மார்ச் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் மீது, விழுப்புரம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பசுபதி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

மூன்று நாள்களுக்கு முன்பு தனது பதவியையும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பிய நிலையில், அதை கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு, பசுபதியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் இணையத்தில் பசுபதி மீது தொடர்ந்து மோசமான கருத்துகளை (ஒருமையில் பேசி) பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் பசுபதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இதுதொடர்பாக அவர் விளக்கமும் அளித்துள்ளார். அதில், சி.வி. சண்முகத்தை பசுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சி.வி.சண்முகம் தனது பினாமிகளுக்கு மட்டுமே சீட் கொடுப்பதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஓரங்கட்டுவதாகவும் குற்றம்சாட்டிய பசுபதி, இதுகுறித்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து தலைமைக் கழகத்திற்கு ராஜினாமா கடிதம் அனுப்பினேன் என்று தெரிவித்தார்.

மேலும், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள பசுபதி, 2006-ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, தனது சொந்த செலவில் ஆட்களை திரட்டிச் சென்று அவரைக் காப்பாற்றிய வரலாற்றை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

அன்று பயத்தில் சி.வி.சண்முகம் தனது கையைப் பிடித்துக் கொண்டு அழுததாகவும், அவருக்குப் பாதுகாப்பு அரணாக நின்றது தாங்கள்தான் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருந்தபோதும் பா.ம.க., வி.சி.க உடனான மோதல்களின் போது சி.வி.சண்முகத்திற்குத் துணையாக நின்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் போராட்டங்களுக்கு தனது சொந்தப் பணத்தை செலவழித்து வருவதாகக் கூறியுள்ள பசுபதி, தன்னை “எலும்புத் துண்டுக்கு ஆசைப்படுபவன்” என்று விமர்சிப்பவர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உங்க அண்ணனுக்கே (சி.வி.சண்முகம்) கறி, எலும்பு போட்டுச் சோறு போட்டது நான்தான்” என்று ஆவேசமாகப் பேசியுள்ள அவர், பல அன்னதான நிகழ்ச்சிகளை நடத்திய தனக்கு, மற்றவர்கள் போடும் கறித் துண்டுகளுக்கு ஆசைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சாடியுள்ளார்.

தன்னுடைய நகை மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் இருந்து பணங்களை பெற்று அதிமுகவுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தும், பொதுக்கூட்டத்திற்கு செலவு செய்தவனும் நான் தான் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நேரம் என்பதால், பசுபதியின் இந்த காணொளி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN