ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 10 சவரன் நகை கொள்ளை -குற்றவாளி கைது!
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற ''சீரியல்'' திருடனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். விசாணையில், பல ஆண்டுகளாக சென்னையில்
Central


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 'சீரியல்' திருடனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாணையில், பல ஆண்டுகளாக சென்னையில் பல இடங்களில் அவர் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

திண்டிவனம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகலா (41). இவர் கடந்த மார்ச் 7ஆம் தேதி திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு தனது தாயாருடன் ரயிலில் சென்றுள்ளார்.

பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு வந்த அவர்கள், அங்கிருந்து அத்திப்பட்டு பகுதிக்கு செல்ல டிக்கெட் வாங்கியுள்ளனர்.

ரயில் வருவதற்கு சிறிது நேரம் ஆகும் என்பதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் வளாகத்துக்கு சென்ற சசிகலாவும், அவரது தாயாரும் கீழே படுத்து தூங்கியுள்ளனர்.

அப்போது, சசிகலா தாங்கள் கொண்டு வந்த 10 சவரன் நகைகளுடன் இருந்த கட்டைப் பையை தனது தலைக்கு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.

பின்னர் விடியற்காலை எழுந்து பார்த்த போது, பை காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா, சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால், பையை திருடிய நபரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த சட்டையை வைத்து அடுத்தடுத்த ரயில் நிலைய சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் அவரை 'ட்ராக் செய்தனர். ஆனால், தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பிறகு அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

பின்னர், தாம்பரம் பேருந்து நிலைய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், அந்த நபர் திருவண்ணாமலை பேருந்தில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அந்த நபரின் புகைப்படத்தை சென்ட்ரல் ரயில்வே போலீசார் அனுப்பினர்.

தொடர்ந்து, அவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்ற ரயில்வே தனிப்படை போலீசார், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இந்திரவனம் பகுதியில் அவர் சுற்றித்திரிந்ததை சிசிடிவி கேரமாவில் கண்டுபிடித்தனர்.

தலையில் மொட்டை அடித்திருந்ததால் 'முக ஆய்வு முறை' (face analyzing method), அவர்தான் திருட்டில் ஈடுபட்ட நபர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, சென்னை பார்க் ரயில் நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் (55) என்பதும், கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், உல்லாச வாழ்க்கைக்காக தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரிடம் இருந்து 4 வளையல்கள், 4 தங்க மோதிரங்கள், 4 தங்க கம்மல்கள், ஒரு இரட்டை பட்டை தங்க செயின் ஆகியவற்றையும் சென்ட்ரல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN