Enter your Email Address to subscribe to our newsletters

துபாய், 28 மார்ச் (ஹி.ச.)
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதல், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய குடிமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஈரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், தனது வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் ஆகியோரை குறிவைத்து படுகொலை செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இத்தகைய முயற்சிகள் “அரசு ஆதரவு பயங்கரவாதம்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள சில முக்கிய இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், தாக்குதலின் விவரங்கள் குறித்து உடனடி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், பெய்ரூட் நகரில் புகை மூட்டம் காணப்பட்டாலும், லெபனான் தலைநகரை தாக்கியதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம், ஈரானிய ஏவுகணைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்த பதற்றநிலையினால், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளவில் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் விளைவாக உர விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரித்த வெப்பநிலை மற்றும் மாறுபட்ட வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வளரும் நாடுகளின் விவசாயிகள், இந்த உரத்தட்டுப்பாட்டால் மேலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
முக்கிய உர ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றின் விநியோகம் குறைந்துள்ளது. நடவு பருவம் தொடங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பற்றாக்குறை, அடுத்த பருவத்தில் விளைச்சல் குறைவு மற்றும் பயிர் சேதத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM