Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும்
ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மார்ச் 26- ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கக்கோரி படிவம் 6 விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் சுமார் 30,228 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இது தேர்தல் செயல்பாடுகளில் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 4,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் மட்டும் 2,719 பெண்கள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளிலும் கணிசமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
எனினும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1,942 விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன.
மேலூர் சட்டமன்றத் தொகுதியில் 2,063 பேரும், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் 2,271 பேரும், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 3,191 பேரும், மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் 2,919 பேரும், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 4,396 பேரும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 3,884 பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
இதில் மதுரை கிழக்கு தொகுதியில் மட்டும் 4 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும்
சுமார் 6.48 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN