மில்க் க்ஷேக்கில் விஷம் கலந்து கொடுத்து தந்தையை கொன்ற மகள்
மகாராஷ்டிரா, 28 மார்ச் (ஹி.ச.) மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக ஜெயந்த் பல்லாவர் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2023 மார்ச் 25, சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியில் இருந்த ஜெயந்த் பல்லாவதி
கொலை


மகாராஷ்டிரா, 28 மார்ச் (ஹி.ச.)

மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக ஜெயந்த் பல்லாவர் என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த 2023 மார்ச் 25, சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியில் இருந்த ஜெயந்த் பல்லாவதிடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் இது தற்செயலான மரணம் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் சொந்த மகளால் நூதன முறையில் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜெயந்தின் மகள் ஆர்யா, ஆஷிஷ் ஷெட்மாடே என்பவரை 2022 முதல் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு தந்தை ஜெயந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா, தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று தந்தை வேலைக்குச் செல்லும் முன், ஆர்யா அவருக்கு விஷம் கலந்த மில்க்ஷேக்கை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே ஜெயந்த் பணியிடத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

தந்தை இறந்த பிறகு, ஆர்யா கருணை அடிப்படையில் காவல்துறை வேலை பெற்று, பயிற்சியில் இருந்துள்ளார்.

இதற்கிடையில் ஆர்யாவுக்கும் ஆஷிஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ், இந்த கொலை குறித்த ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து, ஜெயந்தின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை மறுபரிசீலனை செய்தனர். அதில் அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது உறுதியானது.

விசாரணையில் ஆர்யா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam