Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நாளை
(மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர விமான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் தரை இறங்குவதற்கும் மற்றும் இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது இரவு நேரச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாளை முதல் மாற்றப்பட்ட விமான கால அட்டவணை பின்வருமாறு:
நாளை முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்களின் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ➔ தூத்துக்குடி: சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
தூத்துக்குடி ➔ சென்னை: தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.
இதர விமானங்களின் புதிய நேரங்கள்:
காலை சென்னை விமானம்: 08:10 AM
முற்பகல் சென்னை விமானம்: 12:05 PM
மதியம் பெங்களூரு விமானம்: 01:10 PM
மாலை சென்னை விமானம்: 04:10 PM
இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரவு நேரச் சேவை தொடங்கப்படுவது வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்போருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
நாளை தொடங்கும் முதல் இரவு நேரச் சேவைக்காக ஏற்கனவே ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b