Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திருவான்மியூர் திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, சூரியபிரபை, சந்திரபிரபை, தியாகராஜர் வீதி உலா நடைபெற்றது.
25-ம் தேதி அதிகார நந்தி சேவை, பூத வாகனம், திருபவனி, நடைபெற்றது.
தொடர்ந்து, புருஷா மிருக வாகனம், நாக வாகனம் வீதி உலாவும், நேற்று காலை தொட்டி விழா, பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. இன்று யானை வாகன பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (29-ம் தேதி) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 30-ம் தேதி பரிவேட்டை விழாவும், 31-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கின்றன.
11-ம் நாள் விழாவான ஏப்.2-ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப விழாவும், அதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி விமானத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, நாளை (29-ம் தேதி) தேரோட்டமும், 30-ம் தேதி அறுபத்து மூவர் விழாவும்,
ஏப்.1-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கோவில் வளாகப் பகுதிகளில் காவல்துறை சார்பில்பலத்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நாளைய தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஸ்டாலின்குமாருடன் இணைந்து அலுவலர்களும் பக்தர்களும் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b