Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 மார்ச் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவி உள்ளிட்ட இடங்களில், சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் பெருகும்.
கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பழைய குற்றால அருவி பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது. தடுப்புகள், கழிவறைகள், தரைதளங்கள் மற்றும் அருவிக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருந்தது.
இதனை சரிசெய்ய வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து தீவிர மேம்பாட்டு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது தடுப்புகள் இடம் மாற்றப்படாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு ஆண்கள், பெண்கள் அருகே குளித்துவருவதற்குப் பதிலாக, நடுப்பகுதியில் சுவர் போன்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. கழிவறை செப்டிக் டேங்க் வேலை மட்டுமே மீதமுள்ள நிலையில், மற்ற பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. கோடை வெயிலில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால், மழை பெய்தால் தண்ணீர் நிலை அதிகரிக்கும் பட்சத்தில், சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
133 நாட்கள் கழித்து மூடப்பட்ட பழைய குற்றால அருவியில் விரைவில் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளதை உறுதி செய்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM