தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 30 - 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ளனர்
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) சென்னையில் உள்ள தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கே.என். பாஷா மற்றும் தேர்தலை நடத்தும் உயர் மட்டக்குழு உறுப்பினரும், உயர் நீதிமன்ற மூத்த வழக
Bar


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் உள்ள தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கே.என். பாஷா மற்றும் தேர்தலை நடத்தும் உயர் மட்டக்குழு உறுப்பினரும், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான இ. ஓம் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த தேர்தல், கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றதையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் 166 வாக்குச்சாவடி மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் என மொத்தம் 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக க்யூஆர் கோடு முறையில் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவுள்ளதாகவும், வாக்களிக்க வரும் வழக்கறிஞர்களுக்கு வலது கையின் ஆள்காட்டி விரலில் அழியா மை வைக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். க்யூஆர் கோடு ஸ்லிப்பை ஸ்கேன் செய்தவுடன் வாக்காளரின் பெயர், பதிவு எண், எந்த வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவர், எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் போன்ற அனைத்து விவரங்களும் உடனடியாக கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் குறைந்தது 5 பெண்கள் உட்பட 23 பார் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட உள்ளது. வழக்கறிஞர்கள் முன்னுரிமை அடிப்படையில் 1, 2, 3 என 23 பேருக்கு வாக்களிக்கலாம்.

மொத்தம் 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 3 பேரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 5 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால் தற்போது 143 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிமன்ற அதிகாரிகள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளதால், கலையரங்கம் மற்றும் எஸ்பிளனேடு நுழைவாயில் அருகே 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வாக்குச்சாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 8,591 பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3-ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்குக்கு பணம் அல்லது பொருள் கொடுத்தது ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகளான கே.என். பாஷா மற்றும் இ. ஓம் பிரகாஷ் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ