2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - தட்டாஞ்சாவடி தொகுதியின் கள நிலவரம்
புதுச்சேரி, 28 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளில், தொகுதி எண் 9 ஆக விளங்கும் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுச்சேரி நகரின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது உழவர்கரை நகராட்சியின் வார்டுகள் 8, 18, 19, 20 மற்றும் 34 ஆக
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - தட்டாஞ்சாவடி தொகுதியின் கள நிலவரம்


புதுச்சேரி, 28 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளில், தொகுதி எண் 9 ஆக விளங்கும் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுச்சேரி நகரின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

இது உழவர்கரை நகராட்சியின் வார்டுகள் 8, 18, 19, 20 மற்றும் 34 ஆகியவற்றை உள்ளடக்கியது. நகர்ப்புறத் தன்மையும், தொழில்துறை முக்கியத்துவமும் ஒருசேரப் பெற்ற தொகுதியாக தட்டாஞ்சாவடி திகழ்கிறது.

தட்டாஞ்சாவடி பொருளாதாரச் சிறப்புகள்

தட்டாஞ்சாவடி, புதுச்சேரியின் தொழிற்துறை மையமாக விளங்குகிறது. இங்கு 1962-ல் தொடங்கப்பட்ட தொழிற்பேட்டை (PIPDIC) நூற்றுக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களுக்கு இடமளிக்கிறது. இங்கு 110-க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன.

இங்கு சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஐடி பூங்கா, இத்தொகுதியின் பொருளாதார முகத்தையே மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொகுதியின் மையப்பகுதியில் புகழ்பெற்ற தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரி அரசின் தொழில் மற்றும் வணிகத் துறை இயக்ககம் (Directorate of Industries & Commerce) அமைந்துள்ளது.

வாக்காளர் விவரங்கள் :

2026 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 26,603 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள்: 12,428,

பெண் வாக்காளர்கள்: 14,170,

மூன்றாம் பாலினத்தவர்: 5

மொத்த வாக்காளர்கள்: 26,603 உள்ளனர்.

இத்தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 1,000 ஆண்களுக்கு 1,137 பெண்கள் என்ற விகிதத்தில் வாக்காளர்கள் உள்ளனர்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது இத்தொகுதியில் 30,661 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 26,603 ஆகக் குறைந்துள்ளது

தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் :

இத்தொகுதியில் 1974 முதல் நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 5 முறையும், ஜனதா தளம் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இத்தொகுதி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் வலுவான பிடியில் உள்ளது.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்: புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி (அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் - AINRC)

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தனது சொந்தக் கோட்டையான தட்டாஞ்சாவடியில் எளிதாக வெற்றி பெற்ற ரங்கசாமிக்கு, ஏனாம் தொகுதி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

அங்கு சுயேச்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக்கிடம் 2,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.

முதலமைச்சர் வேட்பாளராக இருந்த ஒருவர் ஒரு தொகுதியில் தோற்றது அப்போது தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தலில் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிடவுள்ளார். ரங்கசாமி பலமுறை வெற்றி பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இம்முறையும் அவருக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த ரங்கசாமி தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் எஸ். கார்த்திக் குமாரி போட்டியிடுகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் எம். பன்னீர்செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொகுதி மக்களின் நீண்டகால மற்றும் தற்போதைய எதிர்பார்ப்புகள்

உட்புறச் சாலைகள்:

தொகுதியின் பல பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தொழிற்பேட்டை வசதிகள் :

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் போதிய மின்சாரம், சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் இல்லாதது தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பகுதியை நவீனப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு :

தொகுதியில் உள்ள இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. நலிவடைந்து வரும் சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்கத் தேவையான அரசு உதவிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்தியாவசியத் தேவைகள் :

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மின்சார விநியோகம்:

சீரான மின்சார விநியோகம் மற்றும் மின் கட்டண உயர்வை முறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் மக்களிடையே உள்ளன.

புதிய திட்டங்கள்:

தற்போது தட்டாஞ்சாவடியில் 21.30 ஏக்கர் பரப்பளவில் பிரத்யேகமாக தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் (IT SEZ) அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது சுமார் ₹1,250 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

மாநில அந்தஸ்து :

புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் இத்தொகுதி மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b