Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு – பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட 13 ரூபாய் கலால் வரியை 3 ரூபாயாகக் குறைத்ததோடு, டீசலுக்கு வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் கலால் வரியை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும், எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை நாட்டு மக்கள் மீது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வைத்திருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
இந்திய நாட்டின் பொருளாதாரத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்திலிருந்து பொதுமக்களையும் பாதுகாத்திடும் வகையிலான திடமான முடிவை எடுத்து அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b