Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
சென்னை அடையாரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து, அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.
அதேவேளை கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
அமமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சைதாப்பேட்டை – செந்தமிழன், திருப்பத்தூர் – ஞானசேகரன், பூவிருந்தவல்லி – ஏழுமலை, நாங்குநேரி – இசக்கிமுத்து, ஓட்டப்பிடாரம் – சுந்தர்ராஜன், பெரியகுளம் – கதிர்காமு, மடத்துக்குளம் – சண்முகவேலு, திருவையாறு – வேலுகார்த்திகேயன், காரைக்குடி – தேர்போகி பாண்டி, திருச்சி மேற்கு – தொட்டியம் ராஜசேகரன், மன்னார்குடி – எஸ். காமராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் 16 தொகுதிகள் கோரப்பட்டதாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் கூட்டணியில் 11 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதில் 10 தொகுதிகள் தாங்கள் கேட்டவைதான் கிடைத்துள்ளன என்றும் கூறினார். கட்சியை விட்டு விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உடன் இணைந்து தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் அமைதி புரட்சி உருவாகி வருவதாகவும், 2011 போல இந்த முறை மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
சசிகலா தரப்பு தனியாக போட்டியிடுவதால் அமமுகக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்த தேர்தல் திமுகக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நடைபெறும் போட்டியாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ