தொகுதி தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் குற்றச்சாட்டு கார்ட்டூன் மூலம் பிரவீன் சக்கரவர்த்தி பதில்
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என குற்றச்சாட்டியிருந்தார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்
தொகுதி தேர்வில் வெளிப்படைத் தன்மை  இல்லை : காங்கிரஸ்  எம்.பி ஜோதிமணியின்  குற்றச்சாட்டு  கார்ட்டூன் மூலம் பிரவீன் சக்கரவர்த்தி பதில்


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என குற்றச்சாட்டியிருந்தார்.

இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தைப் பொறுப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது.

பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகு முறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணியின் பதிவை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று கார்ட்டூன் படம் (கருத்துப் படம் (Meme) ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை 'முட்டாள்தனம்' என்றும், வருங்காலத்தில் தேவைப்படும் மாற்றம் 'புத்திசாலித்தனம்' என்றும் இரு வேறு நிலைகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பீட்சாவை 'தொகுதிகள்' என உருவகப்படுத்தி, முதல் படத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு தொகுதிகளைப் பிய்த்து எடுப்பது போல உள்ளது.

இரண்டாம் படத்தில் அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து அதே தொகுதிகளைப் பகிர்ந்து உண்பது போலவும் வரையப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்களைத் தவிர்த்து, ஒற்றுமையுடன் தொகுதிப் பங்கீட்டை அணுகினால் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்ற செய்தியை இந்தக் கேலிச்சித்திரம் மறைமுகமாக உணர்த்துகிறது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப்படம், அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b