Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் வாக்காளர், தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (விவிபாட்) முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் தலா 90 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 97,500 விவிபாட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் பயன்பாடு போக, பழுதாகும்போது மாற்றுவதற்கான 20 சதவீத இருப்பு வைப்பு இயந்திரங்களும் அடங்கும். மாவட்ட அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தொகுதிவாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இயந்திரங்களை தொகுதிவாரியாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் செயல்படும் வைப்பறைக்குக் கொண்டு செல்லும் பணி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
அதன்படி சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் பணிகள் நேற்று தொடங்கின.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலக வளாகத்தில் இன்று பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்று இயந்திரங்களை வழங்குதல், இந்த பணிகளின் போது பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை வசதி, மின் வசதி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை களஆய்வு மேற்கொண்டு, தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b