Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 29 மார்ச் (ஹி.ச)
பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தலமாகவும், சர்வதோச பரிகார தளமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோயில் விளங்கி வருகிறது. சிறப்புமிக்க இந்த கோயிலின் ஆழித்தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை மிக்க இந்த தேர் 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்டதாகும்.
குறிப்பாக நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுக்கும் எளிதாக நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. தேரின் முன் பகுதியில் கட்டப்படும் நான்கு குதிரைகள் யாழி பிரம்ம உள்ளிட்ட பொம்மைகள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.
சிறப்புமிக்க இந்த ஆழித்தேரோட்டம், ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த வருட ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தேரை அலங்கரித்து வந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் விநாயகர், முருகன் ஆகிய தேர்கள் நான்கு வீதிகளிலும் வலம் வந்த, பின்னர் சரியாக 9:05மணிக்கு ஆழி தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்கள் “ஆரூரா தியாகேசா” என முழக்கங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஆழித்தேர் அசைந்து வரும் காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
இந்த தேரோட்ட விழாவை முன்னிட்டு திருவாரூர் எஸ்பி கருண் கரட் தலைமையில் 1,500 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் 4 வீதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நகராட்சி சார்பில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b