ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்
சனா, 29 மார்ச் (ஹி.ச.) ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, ஈரானும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோதல்களில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக
ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்


சனா, 29 மார்ச் (ஹி.ச.)

ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, ஈரானும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மோதல்களில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் இந்த பதற்றமான சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதலில் ஈடுபட்டது.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனானையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்தால், நேரடி ராணுவ மோதலில் ஈடுபடத் தயார் என ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏமனிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு தரப்புகள் உறுதிப்படுத்தின.

தற்போதைய சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் இரண்டாவது தாக்குதலும் வெற்றியடைந்ததாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா சரீ வெளியிட்ட அறிக்கையில், ஈரானுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஆதரவாக இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் குறிக்கோள்கள் நிறைவேறும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM