Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தங்களது கூட்டணியை உறுதி செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, இந்த தேர்தலில் அக்கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதில், 15 தொகுதிகள் வரை கிருஷ்ணசாமி கேட்டதாகவும், அதனை மறுத்த அதிமுக அதிகபட்சமாக 5 தொகுதிகள் வரை கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிருப்தியடைந்த கிருஷ்ணசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 முதல் 70 தொகுதிகள் வரை தனித்து போட்டியிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், முதற்கட்டமாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக போட்டியிடும் 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று (29-03-26) அறிவித்தார்.
அதன்படி, வாசுதேவநல்லூர் தொகுதியில் பா.பால்ராஜ், சங்கரன்கோவில் தொகுதியில் பிரபாகரன், கடையநல்லூர் தொகுதியில் கவிதா, நாங்குநேரி தொகுதியில் தமிழ்செல்வி, விருதுநகர் தொகுதியில் பாலசுப்பிரமணியம் போன்ற 43 வேட்பாளர்கள் பட்டியலை கிருஷ்ணசாமி அறிவித்தார்.
இந்த தேர்தலில் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ