தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு,மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை
சென்னை, 29 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கு
Omni


சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் தமிழகத்தில் சில இடங்களில் உயர உள்ளது. அதாவது தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. வாகன வகையைப் பொறுத்து சுமார் ₹5 முதல் ₹100 வரை கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் பொதுப் போக்குவரத்து துறையில் இன்னும் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதால், தினசரி இயக்கச் செலவில் சுங்க சாவடி கட்டணம் பெரிய சுமையாக மாறி உள்ளது.

குறிப்பாக ஒரு ஆம்னி பேருந்துக்கு தமிழ்நாடு சாலை வரி தினசரி சராசரியாக ரூ.2,000க்கும் மேல் செலுத்தி வரும் நிலையில் டோல்கேட் கட்டணமாக மத்திய அரசிற்கு சுமார் ரூ.2,000க்கும் மேல் தினசரி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலையில் ஒவ்வொரு வருடமும் உயர்த்துவது ஏற்கனவே நழிவடைந்துள்ள பொது போக்குவரத்து துறை மேலும் நலிவடையும் .

டோல்கேட் கட்டண உயர்வாள் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் போது அதன் தாக்கம் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் காணப்படுகிறது. எனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது சாலைப் பயணிகளுக்கான பிரச்சினை மட்டுமல்லது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவையும், நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளையும் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறுகிறது.

மேலும் அதிகரிக்கும் சுங்க கட்டணங்களால் சில வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்து உள்ளூர் சாலைகளை பயன்படுத்தும் நிலை உருவாகும் அபாயமும் உள்ளது. இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் எழும் முக்கியமான கேள்வி – ஒரு சாலை திட்டத்தின் கட்டுமான செலவு முழுமையாக மீட்கப்பட்ட பிறகும் ஏன் சுங்க வசூல் தொடர்கிறது என்பதே. கட்டண நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுநலக் கருத்து முக்கியமாக இருக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் தடுப்பு சுவர்களின் (Median Barriers) உயரம் குறைவாக உள்ளதால் சமீபத்தில் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க உடனடியாக தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.

சாலைகள் வளர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் அந்த வளர்ச்சியின் சுமை அளவுக்கு மீறி பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து துறையின் மீது விழாமல் இருக்க அரசு சமநிலையான கொள்கைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் உடனடியாக மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு நிறுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். மேலும், டோல்கேட்டுகளில் அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் சிரமங்களை குறைக்க வேண்டும்.

அதேபோல், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ